திருமங்கையாழ்வார், நீலன் என்னும் பெயருடன் அவதாரம் செய்த ஸ்தலம். குமுதவல்லி நாச்சியார் என்பவரை மணந்துக் கொள்ள எண்ணியபோது, அவள், "ஓராண்டிற்கு தினமும் ஆயிரம் வைஷ்ணவர்களுக்கு அன்னதானம் செய்தால் திருமணம் செய்துக் கொள்கிறேன்" என்று கூற, நீலனும் அவ்வாறே அன்னதானம் செய்ய துவங்கினான். தன்னிடம் இருந்த பொருள் தீர்ந்தபிறகு வழிப்பறி செய்து அதைக் கொண்டு அன்னதானம் செய்தான். ஒருநாள் பெருமாள் மாறுவேடத்தில் வர, அவரிடம் வழிப்பறி செய்ய, பெருமாள் நீலனுக்கு
அஷ்டாட்சர மந்திரத்தை உபதேசம் செய்து ஆட்கொண்டார்.
திருவாலி மூலவர் லக்ஷ்மி நரசிம்ஹர் என்ற திருநாமத்துடன் லக்ஷ்மி தேவியை தமது மடியில் அமர்த்திய நிலையில் வீற்றிருந்த திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். உற்சவர் திருநாமம் திருவாலி நகராளன். தாயார் அம்ருதகடவல்லி என்றும், பூர்ணவல்லி நாச்சியார் என்றும் வணங்கப்படுகின்றார். திருமங்கையாழ்வார், அலாதி நிகஞ்சம ப்ரஜாபதி ஆகியோருக்கு பகவான் பிரத்யக்ஷம்.
திருநகரி மூலவர் வேதராஜன் என்ற திருநாமத்துடன் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வீற்றிருந்த திருக்கோலம், மேற்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். இவரே ஆழ்வார் பாசுரத்தில் பாடப்பட்டுள்ள வயலாளி மணவாளன். உற்சவர் திருநாமம் கல்யாண ரங்கநாதன். தாயார் அம்ருதவல்லி என்று வணங்கப்படுகின்றார்.
திருமங்கையாழ்வார் அவதார ஸ்தலம். அவர் ஆராதித்து வந்த உற்சவ மூர்த்தியும் இங்கு உள்ளார். இங்கிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் உள்ள வேதராஜபுரத்தில்தான் நீலன் பெருமாளை வழிப்பறி செய்து, பின்னர் உபதேசமும் பெற்றான். அதை நினைவுகூறும் வகையில் இங்கு வேடுபறி உத்ஸவம் நடைபெறுகிறது. மணவாள மாமுனிகள் மங்களாசனம் செய்த ஸ்தலம்.
தை மாதம் அமாவாசை தினத்திற்கு மறுநாள் நடக்கும் கருடசேவை மிக விசேஷம். திருமணிமாடக் கோயில் வாசலில் 11 திவ்யதேசப் பெருமாள்களும் கருட வாகனத்தில் எழுந்தருளி, அங்கு திருமங்கையாழ்வாருக்கும், அவரது பத்தினி குமுதவல்லிக்கும் மரியாதைகள் நடந்து பின்னர் வீதி புறப்பாடு நடக்கும் நிகழ்வு கண்கொள்ளாக் காட்சியாகும்.
திருமங்கையாழ்வார் 41 பாசுரங்களையும், குலசேகராழ்வார் 1 பாசுரமுமாக மொத்தம் 42 பாசுரங்கள் பாடியுள்ளனர்.
இக்கோயில் காலை 8 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|